கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் திறந்து வைப்பு - மருத்துவத்துறைசார் கற்கைநெறிகளுக்கான கல்வி நிறுவனம் நாட்டிற்கு மனித நேயத்தின் பிரதிபலிப்பாய் மிளிரும்!



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டக் கூடிய தாதிய உதவியாளர் கல்வி நிலையம், கிழக்குப் புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் திறந்து வைக்கப்படுவது சேவை செய்யத் துடிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு நல்வாய்ப்பாய் அமையும்  என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எல். தாஹிறா சபியுதீன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு – ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் மருத்துவத்துறைசார் கற்கைநெறிகளுக்கான கல்வி நிறுவனத்தையும் பயிற்சி நெறியையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு செவ்வாயன்று 11.08.2026 மேற்படி பராமரிப்பு நிலைய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


தேசிய தொழிற் தகைமைச் சான்றிதழ் தராதரத்துடன் கூடிய இந்தப் பயிற்சி நெறிக்கு நாடெங்கிலுமிருந்தும் 35 தாதிய உதவியாளர் பயிலுநர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.


நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தாஹிறா, மூன்றாம் நிலைக் கல்வி தொழில்சார் கல்விச் சான்றிதழுடன் கூடிய இந்த தாதிய உதவியாளர் பயிற்சியைப் பூர்த்தி செய்வதற்குரிய பணியிடப் பயிற்சிகளுக்கு சகல உதவிகளையும் வழங்க பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் உறுதியளித்துள்ளார்.


சகல வசதிகளுடன், மனோரம்யமான சூழலுடன் கூடிய கல்வியகத்தில் வெற்றிகரமாக இந்தப் பயிற்சி நெறியை நீங்கள் நிறைவு செய்து இங்குள்ள அரச, தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது வெளிநாடுகளிலுள்ள வைத்தியசாலைகளிலோ பணியாற்றுவதற்கும், உங்கள் வாழ்க்கையை பொருளாதார ரீதியில் வளப்படுத்திக் கொள்வதற்கும் இப்பயிற்சி நெறி உங்களுக்கு உதவும்” என்றார்.


சூம் தொழிநுட்பத்தின் வாயிலாக நிகழ்வில் கலந்து கொண்ட தெரிவு செய்யப்பட்ட தாதிய பயிற்சி மாணவர்கள்இ பெற்றோர், அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் தவிசாளரும், அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிவருபவருமான  அல்ஹாஜ். எஸ்.எல்.எம். பௌஸ், தாதிய சேவை என்பது வெறும் சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றுவதல்ல அது அன்பு, மனித நேயம் ஆகியவற்றின் ஊற்றாக இருக்கும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அன்பு, பண்பு, கருணை, கனிவு,  மனித நேயம், சேவை மனப்பான்மை ஆகியவற்றுடன் பராமரிப்புச் செய்யக்கூடியதாக இருந்தால் அதுவொரு பெரும் பாக்கியமாக இருக்கும். அதனாலேயே நாம் இந்தக் கல்வி நிலையத்தை மட்டக்களப்பு ஏறாவூரில் ஆரம்பிக்கிறோம். எதிர்காலத்தில் இந்தக் கல்வி நிலையம் மனித நேயத்தின் கலங்கரை விளக்காகத் மிளிர்ந்து  முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழும்  என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.


இந்நிகழ்வில், ஏறாவூர் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வானதி கிரிதரன், கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய முகாமையாளர் யூ.எல். நூகுலெப்பை, திட்ட ஆலோசகர் யூ. முஜிபுர்றஹ்மான், கற்கை நெறிகளுக்கான இணைப்பாளர் இஸ்ஸத் முஸ்தபா, காதி நீதிவான் அலிமுஹம்மத், முன்னாள் அதிபர் எம். எம். ஜலால்தீன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 












Post a Comment

0 Comments