மட்டுநகர் பார்வீதியில் வாழ்ந்த ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபரான அமரர் கணேசமூர்த்தி அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தவரின் அனுசரணையில் சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு ஏழு வீரர்கள் பங்குகொள்ளும் விலகல் முறையிலான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி கடந்த 04,05,06. 09.2026 ஆந் திகதிகளில் சீலாமுனையிலுள்ள யங்ஸ்டார் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டக் கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடனும், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட நடுவர்கள் சங்கத்தின் ஆதரவுடனும் நடந்த இச்சுற்றுப் போட்டியில் மட்டுநகர், காத்தான்குடி, படுவான்கரைப் பிரதேசங்களின் கால்பந்தாட்டச் சங்கங்களைச் சேர்ந்த 46 அணிகள் பங்குபற்றியிருந்தன.
இதில் அரையிறுதிவரை முறையே சம்மாந்துறை எவகிறீன், மாமாங்கம் ரெட்ணம், கூளாவடி டிஸ்கோ, சீலாமுனை யங்ஸ்டார் கழக அணிகள் முன்னேறியிருந்தன.
இதில் இறுதிப் போட்டியில் கூளாவடி டிஸ்கோவும் மாமாங்கம் ரெட்ணமும் முன்னேறி சம்பியன் கிண்ணத்திற்கான பலப்பரீட்சையில் ஈடுபட்டன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் எதுவித பேறுகளும் போடப்படாத நிலையில் தண்டனை உதைப் போட்டியூடாக வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் மாமாங்கம் ரெட்ணம் அணி வெற்றி பெற்று 2026 ஆம் ஆண்டிற்கான அமரர் கணேசமூர்த்தி நினைவுக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
சீலாமுனை யங்ஸ்டார் கழகத்தின் கழகத்தின் தலைவர் ப. சுதாகரன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதன்மை அதிதிகளாக ஓய்வுநிலைக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு அ. சுகுமாரன் அவர்களும், ஓய்வுநிலை கிழக்குமாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தரும், இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான திரு வே. ஈஸ்பரன் அவர்களும், கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளரான து. கௌரீஸ்வரன் அவர்களும்பங்குபற்றினர்.
சிறப்பு அதிதிகளாக வைத்தியர் திருமதி கஜந்தி ஜெயதீபன், பொறியியலாளர் ஜெ. தர்மசீலன்,திருமதி நதியா சுபஜித், திருமதி பொர்ணிகா சுபாகரன், திருமதி சோபிதா உதயகீர்த்தனன், செல்வி பரமேஸ்வரன் பிரமிளா, திரு ரவிச்சந்திரன் ருசாந்தன் ஆகியோரும் பங்குபற்றினர்.
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட நடுவர்கள் சங்கத்தின் தலைவர் ஹ. மில்டன், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் சுற்றுப்போட்டிகள் குழுத் தலைவர் திரு ரி. சுதர்சன், சீலாமுனை யங்ஸ்டார் கழகத்தின் முன்னாள் தலைவர்களான சீ. நவநேசராசா, ஜோ. தேவசிகாமணி, திரு கணேசமூர்த்தி சைலேஸ் ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.
இப்பரிசளிப்பு விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்த, வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற சிறுவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றது.
பரிசளிப்பு விழாவை யங்ஸ்டார் கழகத்தின் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ உறுப்பினருமான திரு ந. சுதர்சன், கழகத்தின் பொருளாளர் அ. திவாகரன், கழகத்தின் நிருவாகக்குழு உறுப்பினர் து. சோதீஸ்வரன் மற்றும் கீ. டிலக்சன் ஆகியோருள்ளிட்ட கழகத்தின் உறுப்பினர்கள் சிறப்புற ஒழுங்கமைத்து நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
tamil makal kural