ஆடை என்பது உடலை மறைப்பதற்கான துணி மட்டுமல்ல; அது ஒருவரின் ஆளுமை, அழகியல் உணர்வு மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஓர் உயிருள்ள கலைவடிவமாகும்.
அந்தக் கலையைத் தனது கைவண்ணத்தால் மெருகேற்றி, ஒவ்வொரு நாளும் புதுமைக்கு புதிய முகம் கொடுத்து வருபவர் தேவிகா.
இவர் தபால் அலுவலக வீதி சாவகச்சேரியில் "கோகிலா டைலரிங்" (Kokila Tailoring) என்ற அடையாளத்தை உருவாக்கி இயங்கிவரும் ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆவர். இவரின் வடிவமைப்புகள் தரம், தனித்துவம் மற்றும் நம்பிக்கையின் சின்னமாக விளங்குகின்றது.
41 வயதான தேவிகா ஆடை வடிவமைப்புத் துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற படைப்பாளியாவர். பெண்களுக்கான நவநாகரிக ஆடைகள் முதல் சிறுமிகளுக்கான வண்ணமயமான விழாக்கால உடைகள் வரை பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்கி வருகிறார்.
காலத்திற்கேற்ப மாறிவரும் ஆடை உலகின் புதிய போக்குகளை உன்னிப்பாகக் கவனித்து, அவற்றைத் தனது கற்பனைத் திறனுடன் இணைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஆடைகளை வடிவமைப்பதில் அவர் சிறந்து விளங்குகிறார்.
பெண்களுக்கான நவநாகரிக மேலங்கிகள்,பிராக் (Frock), தளர்வான ஜீன்ஸ் (Baggy jeans) நவீன பாணி ஆடைகள்,(kurthi, Top, Short Top) சிறுமிகளுக்கான விழாக்கால மேலங்கிகள், லெஹங்கா, அரைச்சேலை (Half saree), இரவிக்கை (Blouse) மற்றும் பல்வேறு வடிவமைப்பு உடைகளை வயது, உடலமைப்பு, விருப்பம் மற்றும் நிகழ்வின் தன்மைக்கு ஏற்ப நேர்த்தியாக வடிவமைக்கிறார். ஒவ்வொரு ஆடையிலும் அழகும், வசதியும், தனித்துவமும் ஒன்றிணைந்திருப்பது அவரது படைப்புகளின் முக்கியமான சிறப்பாகும்.
குறிப்பாக இரவிக்கை வடிவமைப்பில் அவரது திறமை தனி அடையாளத்தைப் பெற்றுள்ளது.
வழக்கமான வடிவமைப்புகளிலிருந்து விலகி, கழுத்தின் அமைப்பு, கை வடிவம், பின்புற அலங்காரம், எம்பிராய்டரி வேலைப்பாடுகள், கல் பதிப்பு அலங்காரங்கள் மற்றும் புதுமையான வெட்டமைப்புகளை இணைத்து ஒவ்வொரு இரவிக்கையையும் தனித்துவமான கலைப்படைப்பாக மாற்றுகிறார்.
அவரது வடிவமைப்புகள் பாரம்பரிய அழகியலையும் நவீன நாகரிகத்தையும் சமநிலையுடன் வெளிப்படுத்துகின்றன.
தேவிகாவின் படைப்பாற்றலின் மற்றொரு சிறப்பு ஒவ்வொரு நாளும் புதிய வடிவமைப்பை உருவாக்கும் அவரது ஆர்வமாகும்.
தினந்தோறும் புதிய ஆடைகளை வடிவமைத்து, அவற்றைத் தாமே அணிந்து அதன் அழகையும் பொருத்தத்தையும் வெளிப்படுத்துகிறார். பின்னர் அவற்றின் புகைப்படங்களைத் தனது "கோகிலா டைலரிங்"(Kokila Tailoring) என்ற முகநூல் (Facebook) பக்கத்தில் பகிர்ந்து வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் பாராட்டுகளையும் பெற்றுக்கொள்கிறார். இந்த நடைமுறை, அவரது வடிவமைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், புதிய படைப்புகளுக்கான ஊக்கத்தையும் உருவாக்குகிறது.
திரைப்பட நடிகைகள் மற்றும் பிரபலங்கள் அணியும் ஆடைகளை நகலெடுக்காமல் ஒவ்வொரு உடலமைப்பிற்குப் பொருத்தமானவாறும் அழகியல் உணர்விற்கு ஏற்வாறும் வடிவமைத்துத் தனித்துவமான ஆடைகளை உருவாக்குகிறார். இதுவே அவரை மற்ற ஆடை வடிவமைப்பாளர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
ஆடை வடிவமைப்பை ஒரு தொழிலாக மட்டுமல்லாமல், பெண்களின் தன்னம்பிக்கையையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் கலைவடிவமாகக் கருதும் தேவிகா, தனது "கோகிலா டைலரிங்" (Kokila Tailoring) என்ற அடையாளத்தின் மூலம் புதுமை, தரம் மற்றும் படைப்பாற்றலை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். ஒவ்வொரு நாளும் புதிய சிந்தனையுடன் புதிய வடிவமைப்புகளை உருவாக்கும் அவரது பயணம், ஆடை உலகில் புதுமையின் அடையாளமாக என்றும் ஒளிரும்.
தேவிகாவின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் மற்றொரு சிறப்பம்சம், சமூக ஊடகங்களின் மூலம் அவர் வழங்கி வரும் இலவசக் கற்றல் முயற்சியாகும். ஆடை வடிவமைப்பில் ஆர்வமுள்ளவர்களும், வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரும் தையல் மற்றும் வடிவமைப்பு நுணுக்கங்களை எளிதாகக் கற்றுக்கொள்ளும் நோக்கில், ஒவ்வொரு ஆடையையும் தைக்கும் இலகு முறைகளைப் படிப்படியாக விளக்கும் காணொளிகளைத் தயாரித்து, அவற்றைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறார்.
அடிப்படைத் தையல் முறைகள் முதல் நவீன ஆடை வடிவமைப்பு நுட்பங்கள் வரை எளிமையாக விளக்கப்படும் அவரது காணொளிகள், பலருக்கு சுயமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியுள்ளன.
தனது தொழில் இரகசியங்களைத் தனக்குள் மட்டுமே வைத்துக்கொள்ளாமல், அடுத்த தலைமுறையினருடன் பகிர்ந்து அவர்களின் திறமைகளை வளர்க்கும் உயரிய மனப்பான்மை, அவரை ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பாளராக மட்டுமல்லாமல், சமூக அக்கறை கொண்ட பயிற்றுனராகவும் அடையாளப்படுத்துகிறது.
அறிவைப் பகிர்வதே வளர்ச்சிக்கான உண்மையான வழி என்பதைத் தனது செயல்களின் மூலம் நிரூபித்து வரும் தேவிகாவின் இந்தப் பண்பு, அவரது ஆளுமையின் சிறந்த அம்சங்களில் ஒன்றாகப் போற்றத்தக்கதாகும்.
தேவிகா தனது "கோகிலா டைலரிங்" (Kokila Tailoring) என்ற அடையாளத்தின் மூலம் ஆடை வடிவமைப்பில் மட்டுமன்றி, புதிய தலைமுறை வடிவமைப்பாளர்களை உருவாக்கும் பணியிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறார்.
ஆடை வடிவமைப்பில் ஆர்வமுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காகச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தித் தனது அனுபவங்களையும் தொழில்நுட்ப நுணுக்கங்களையும் தாராளமாகப் பகிர்ந்து வருகிறார்.
குறிப்பாக, ஒருநாள் சிறப்பு வகுப்புகளை (Master Class) நடத்திக் குறுகிய காலத்தில் ஆடை வடிவமைப்பின் அடிப்படை மற்றும் நவீன உத்திகளைப் பயிற்றுவித்துப் பலருக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
அவரது வழிகாட்டுதலின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் இன்று ஆடை வடிவமைப்புத் துறையில் தங்களுக்கென ஒரு தொழிலை உருவாக்கிச் சுயதொழில் வாய்ப்பைப் பெற்றிருப்பது அவரது பயிற்சியின் வெற்றிக்குச் சிறந்த சான்றாகும்.
2025 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறப்பு ஆடை வடிவமைப்பு நிகழ்வும் அவரது சேவையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு மாணவரும் தாங்களே வடிவமைத்த ஆடைகளை மாதிரிகளுக்கு (Models) அணிவித்து, மேடை நடை (Ramp Walk) மூலம் பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். நிகழ்வின் நிறைவில் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் திறமையைப் பாராட்டித் தொடர்ந்து முன்னேற ஊக்குவிக்கப்பட்டனர்.
ஒரு திறமையான ஆடை வடிவமைப்பாளராக மட்டுமல்லாமல், புதிய படைப்பாளர்களை உருவாக்கும் சிறந்த பயிற்றுனராகவும், பலரின் தொழில் கனவுகளுக்கு வழிகாட்டியாகவும் தேவிகா திகழ்கிறார். அவரது பணிகள், ஆடை வடிவமைப்புத் துறையில் படைப்பாற்றலையும் தொழில்முனைவையும் வளர்க்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளன.
தற்காலத்தில் இவரைப்போலப் பல உள்ளூர் ஆடை வடிவமைப்பாளர்கள் வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் ஆடை வடிவமைப்புத் துறையில் சர்வதேச தரத்தில் இயங்கிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ர.கஸ்தூரி, நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
0 Comments
tamil makal kural