செங்கலடியின் வரலாற்றை ஆற்றுகை செய்த 'செம்மண் சுவடுகள்' என்ற ஆய்வளிக்கை

பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுகளைச் செயல் மையப்பட்டதாக முன்னெடுப்பதில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை அக்கறைகாட்டி வருவதனை நாம் அறிவோம். கடந்த ஒரு பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காத்திரமான செயல்மைய ஆய்வுகளை நுண்கலைத்துறை முன்னெடுத்து வருகின்றது.

மிகப்பெரும்பாலும் ஆய்வாளர்களுக்கு மாத்திரம் பயன்விளைவித்து நூலகங்களுக்குள் முடங்கி விடக்கூடிய எழுத்தை மையமாகக் கொண்ட ஆய்வு நடைமுறைகளிலிருந்து விலகி ஆய்வுக்குட்படுத்தப்படும் மனிதர்களுக்கு நடைமுறையில் பயன்விளைவிக்கவல்ல, சமூக இயக்கத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களை உருவாக்கவல்ல செயல்மைய ஆய்வுகள் இன்றைய காலத்தில் அதிகமாகச் செய்யப்படுதல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்தவகையில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் பாடத்துறையில் சிறப்புக் கற்கையினைத் தொடரும் சர்மிலா தேவராஜா என்கின்ற மாணவி தனது இறுதி ஆண்டுக்கான ஆய்வுச் செயற்பாடாக மட்டக்களப்பின் செங்கலடி என்னும் ஊரின் நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றைச் 'செம்மண் சுவடுகள்' என்ற தலைப்பில் கதைப்பாடலாக ஆக்கஞ் செய்து அதனைக் கும்மி நிகழ்த்துகையாகச் செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து அளிக்கை செய்திருந்தார்.

இவருடைய இந்த ஆய்வளிக்கை தமிழர்தம் உள்ளூர் நிகழ்த்து கலை வடிவங்கள் காலங்கடந்தவையாக, முடங்கிப்போனவையாக ஆகாமல் சமகாலத் தேவைகளுக்கேற்ற விதத்தில் பிரயோகத்திற்குரியவைகளாக இற்றைப்படுத்தப்படும் ஒரு காத்திரமான செயற்பாடாக விளங்குகின்றது.

ஓர் ஆய்வு மாணவியாகக் கள ஆய்வினூடாகச் செங்கலடியின் வரலாற்றைப் பலரிடமும் கேட்டறிந்ததுடன் அதற்கான உசாத்துணைகளையும் ஆய்ந்தறிந்து தகவல்களை உறுதிப்படுத்திய பின்னர், அவற்றை அடிப்படையாகக்கொண்டு கதைப்பாடல்களை ஆக்கஞ் செய்து அதன்பின்னர் செங்கலடியின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர்களுக்கு அதனைக் கும்மி நிகழ்த்துகையாகப் பயிற்றுவிப்பதற்கான உரிய அனுமதிகளைப் பெற்று இன்றைய சூழலில் மாணவர்களுக்கு அதனைக் கச்சிதமாகப் பயிற்றுவித்து அரங்கேற்றத்திற்குத் தயாராக்கி அதனை அளிக்கை செய்திருந்தார். 

இந்த ஆற்றுகைக்கான மத்தள வாசிப்பை கி.நிதுஸ் என்ற மாணவன் செய்திருந்தான் மொத்தம் பன்னிரண்டு மாணவிகள் செழுமையாக ஆற்றுகையினை வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த ஆய்வின் மேற்பார்வையாளராக முதுநிலை விரிவுரையாளரான திரு கு.ரவிச்சந்திரன் அவர்கள் இயங்கியுள்ளார்.

கடந்த 14.08.2026 ஆந் திகதி வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தின் முன்னாலுள்ள திறந்தவெளியில் இந்த ஆய்வளிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்த ஆய்வளிக்கை இதைப்போன்ற செயல்மைய ஆய்வளிக்கைகள் அதிகம் செய்யப்படுதல் வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துவதாகக் காணப்பட்டது.

து.கௌரீஸ்வரன்.
















Post a Comment

0 Comments