இந்திய விடுதலைப் போராட்டத்தில் மட்டுமல்ல, இந்து சமய விழுமியங்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்தியவர்களிலும் அன்னி பெசண்டுக்கு தனி இடமுண்டு.
ஒரு பிரிட்டிஷ் பெண்மணியாக இருந்தும், இந்தியாவின் ஆன்மீகத்தை உள்வாங்கி, அதை மேற்குலகின் அறிவியல் மனப்பான்மைக்கு ஏற்ப விளக்கி, கிழக்குக்கும் மேற்கிற்கும் இடையே பாலம் அமைத்தவர்.
அவரது பங்கு மொழிபெயர்ப்பு, சொற்பொழிவு,எழுத்து, அமைப்பு உருவாக்கம் எனப்பல தளங்களில் விரிந்திருந்தது.
அன்னிபெசண்ட் 1847 ஆம் ஆண்டு இலண்டனில் பிறந்தார். இளமையில் கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டிருந்த இவர், பின்னர் நாத்திகம், சமூகச் சீர்திருத்தம், தொழிலாளர் உரிமைப் போராட்டம், எனப்பல திசைகளில் பயணித்தார். 1789 ஆம் ஆண்டு தியோசபி இயக்கத்தைத் தொடங்கிய இவர் பிளாவட்ஸ்கியைச் சந்தித்த பின்னரே அவரது வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது.
இந்து மதம் மற்றும் பௌத்தம் பற்றிய ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட்ட அவர், 1893 ஆம் ஆண்டு இந்தியா வந்தார். இந்தியாவின் ஆன்மீக மரபில்தான் உண்மையான ஞானம் இருப்பதை உணர்ந்து அதைத் தனது வாழ்வின் நோக்கமாக்கிக் கொண்டார்.
அன்னிபெசண்ட் அம்மையாரின் பங்களிப்புகளில் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரை என்பவை முக்கியமானவை. பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதற்கு "Bhagavad Gita : An Essay on Bhagavad Gita" என்ற விரிவான அறிமுகத்தை எழுதினார்.
மேற்குலகினர் கீதையை வெறும் போர்க்கதையாகப் பார்த்த காலத்தில், அதை ஆன்மாவின் உள்பேறாகத் தர்மத்தின் பாதையாக விளக்கினார். "The Ancient Wisdom" என்ற அவரது நூல் இந்து தத்துவத்தின் அடிப்படைகளான கர்மா, மறுபிறப்பு, மாயை, பிரம்மம் ஆகியவற்றை அறிவியல் பாணியில் எளிமையாக விளக்கியது. இந்த நூல் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பல பதிப்புகள் கண்டு பல்லாயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைந்தது.
அவர் எழுதிய "Esoteric Christianity", "The Riddle Of Life" போன்ற நூல்களும் கிறிஸ்தவ மற்றும் இந்துத் தத்துவத்துக்கு இடையேயான ஒற்றுமையை எடுத்துக்காட்டின.
அம்மையார் சொற்பொழிவுகளில் பேச்சுத் திறமை கொண்டவர். 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை பெரும் கவனம் பெற்றது. "Hinduism" என்ற தலைப்பில் அவர் பேசியபோது, இந்து மதம் என்பது சிலை வழிபாட்டில் மட்டும் அடங்கியது அல்ல, அது ஒரு வாழ்வியல் தத்துவம், அது அறிவியலோடு முரண்படாத ஆன்மீக முறை என்பதை விளக்கினர்.
அவரது பேச்சு மேற்குலக அறிவுஜீவிகள் மத்தியில் இந்து மதத்தின் மீது மரியாதையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகெங்கும் பயணம் செய்து நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகளை ஆற்றினர். ஒவ்வொரு உரையிலும் அவர் வலியுறுத்தியது ஒன்றுதான் - அனைத்து மதங்களின் உள்ளும் ஒரே உண்மை இருக்கிறது, அதை அடைவதற்கான பாதைகள் வேறுபடலாம்.
அன்னி பெசண்ட் அம்மையார் அவர்கள் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளார். 1893 இல் இந்தியா வந்த அவர் 1898 இல் வாரணாசியில் "Central Hindu College" ஐ நிறுவினார். இந்தக் கல்லூரி பின்னர் "Banaras Hindu University" ஆக உருவெடுத்தது. இங்கு சமஸ்கிருதம், வேதம், தத்துவம் ஆகியவற்றோடு நவீன அறிவியலும் சேர்த்துக் கற்பிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய மாணவர்கள் தங்கள் மரபை இழக்காமல் நவீன உலகை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்றனர். அதே நேரம் மேற்குலக மாணவர்களும் இந்தக் கல்லூரிக்கு வந்து இந்துத் தத்துவத்தைக் கற்றனர். தியோசபிகல் சொசைட்டியின் தலைமையிடத்தைச் சென்னை அடையாறுக்கு மாற்றி, அதை உலகளாவிய ஆன்மீக ஆராய்ச்சி மையமாக மாற்றினார். இன்று அடையாறு தியோசபிகல் சொசைட்டி உலகம் முழுவதிலிருந்தும் ஆய்வாளர்களை ஈர்கிறது.
இந்து சமயத்தின் மீதான தவறான புரிதலை அம்மையார் அகற்றினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்குலகில் இந்து மதம் என்பது சாதி, சடங்கு, சிலைவழிபாடு போன்ற குறுகிய பார்வையிலேயே பார்க்கப்பட்டது. அன்னிபெசண்ட் தனது எழுத்துகள் மற்றும் பேச்சுக்கள் மூலம் இந்து மதத்தின் உள்ளார்ந்த தத்துவத்தை வெளிக்கொணர்ந்தார்.
வேதாந்தம், யோகம், பக்தி ஆகிய மார்க்கங்கள் ஒவ்வொரு மனிதரின் மனநிலைக்கு ஏற்ப அமைந்த பாதைகள் என்றார்.
கர்மா மற்றும் மறுபிறப்புக் கோட்பாடு நீதியின் அடிப்படை என்றார். அகிம்சை, சகிப்புத்தன்மை சர்வதர்ம சமநோக்கு ஆகியவை இந்து மதத்தின் உயிர்நாடி என்றார்.
இந்த விளக்கங்கள் மேற்குலகின் தியோசபி இயக்கத்தின் வளர்ச்சிக்கும், யோகா, வேதாந்தம் போன்றவை பரவுவதற்கும் அடித்தளமிட்டன.
அன்னிபெசண்ட் அம்மையாரின் பணியின் சிறப்பு என்னவென்றால், அவர் இந்து மதத்தை ஒரு மேலைத்தேயவராக அல்லாமல் ஒரு இந்தியராக உணர்ந்து விளக்கியமையேயாகும்.
"நான் இந்தியாவை நேசிக்கிறேன், ஏனெனில் இந்தியா உலகுக்கு ஆன்மீகத்தைக் கொடுத்த நாடு" என்றார். அவர் இந்து மதத்தைப் பாதுகாத்தல் அதேநேரம் அதை மூடநம்பிக்கைகளிலிருந்து பிரித்துக் காட்டுதல். சமூக சீர்திருத்தம், பெண் கல்வி, சாதி ஒழிப்பு ஆகியவற்றிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டார். இதனால் இந்து மதம் என்பது பிற்போக்கானது அல்ல, காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் உயிர்ப்புள்ள மதம் என்பதை நிரூபித்தார்.
1933 ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் காலமானாலும் அவர் விதைத்த விதை இன்றும் மரமாக வளர்ந்து நிற்கிறது.
மேற்குலகில் இன்று யோகா, தியானம், வேதாந்தம், அத்வைதம் ஆகியவற்றுக்கு இருக்கும் வரவேற்பு, அன்னி பெசண்ட் போன்றவர்கள் போட்ட அடித்தளத்தின் விளைவே ஆகும். அவர் காட்டிய பாதை, கிழக்கின் ஞானமும் மேற்கு அறிவியலும் இணைந்தால் மனிதகுலம் முழுமை பெறும் என்பதே.
ஞானச்சந்திரன்.சாளினி
இந்து நாகரிகத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
0 Comments
tamil makal kural