தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை அடிப்படையிலான வழக்கு விசாரணை செப்டெம்பர் மாதம் 16 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த வழக்கின் சான்றுகள் இன்னும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
அத்துடன் இந்த சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பிக்க சுமார் 21 நாட்கள் எடுக்கும் என அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளதாக சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
சான்றுகளை நீதிமன்றத்திற்கு சமர்பித்ததன் பின்னர் வழக்கை விசாரிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி குழாம் , இந்த வழக்கு செப்டெம்பர் மாதம் 16 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளது
0 Comments
tamil makal kural