100ஆவது நாளை எட்டியுள்ள பண்ணையாளர்களின் போராட்டம்

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று (23.12.2023) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

குறித்த போராட்டமானது மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

அத்துமீறி குடியேறிய குடியேற்றவாசிகளிடமிருந்து மேய்ச்சல் நிலத்தை மீட்டு தருமாறு கோரி மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 100ஆவது நாளை எட்டியுள்ளது.


பலதரப்பட்டோர் பங்கேற்பு

போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புகள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகள், விவசாய அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள் எனப் பல்வேறு அமைப்புக்களுக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர.

இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்.மதத்தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை முன்வைப்பு

இதன்போது மட்டக்களப்பு மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி அவற்றில் கால்நடை வளர்ப்புக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், மாதவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், கால்நடைகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையில் மகஜர் தயாரிக்கப்பட்டு அங்கு கடமையிலுள்ள பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.

சிலருக்கு உயிர் அச்சுறுத்தல்

போராட்டத்தில்  பங்குபற்றி விட்டு சிலர் வீடு செல்லும்போது இனம் தெரியாத சிலரால் ஊடகவியலாளரகளும், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும்  பொதுமக்களும் வெவ்வேறு இடங்களில் அச்சுறுத்தப்பட்டனர்.

இதில் செய்தி சேகரிப்பு செய்த ஊடகவியலாளர்களான புண்ணியமூர்த்தி சசி,  ச. சதீஸ்குமார்,  சிவில் அமைப்பு பிரதிநிதி ஜீவகுமார் மற்றும் இராஜேந்திரம் வித்தீபன், கமலநாதன், பெண்கள் அமைப்பு பிரதிந்தி ரஜிகலா  உள்ளிட்ட பலர் மக்கள் போக்குவரத்து இல்லாத இடங்களில் வைத்து இந்த போராட்டத்தில் பங்குபற்றியதற்காக அச்சுறுத்தப்பட்டனர்.

இது தொடர்பாக ஒருசிலர் மட்டக்களப்பு பொலிஸ் நிலயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சிலர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.








Post a Comment

0 Comments