தமிழர்களின் ஆதியான பறை இசையுடன் சொர்ணாளியும் சேர்ந்தாலே முழுமை பெறும்

சங்கப்பாடல், மற்றும் அகழாய்வுகளின்படி தமிழர்களின் ஆதியான இசைக் கருவியாக பறை விளங்குகின்றது.


இந்தியத் துணைக் கண்டத்தின் மானுட வரலாற்றில் தொன்மைமிகு குடிகளாகத் தமிழர்களே உள்ளார்கள் என்பது சமகாலத் தொல்பொருள் ஆய்வுளின் ஊடாக உறுதிப்பட்டு வருகின்றது. சங்க இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படும் விடயங்களுக்கான தொல்பொருட் தடயங்கள் ஆதிச்சநல்லூர், கொடுங்கல்லூர், கொடுமணல், கீழடி முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழாய்வுகள் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளன. சங்கப்பாடல்களில் பறை இசை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழர்களின் ஆதி இசைக் கருவியாகப் பறை விளங்குகின்றது.

இவ்வாறு தமிழரின் தொன்மையினைக் காட்டும் பறை தமிழ்ப் பண்பாடுகளின் பன்மைத்தன்மைகளுக்கேற்பவும், தமிழர் வரலாற்றில் உருவான பொருளாதார, அரசியல், சமூகப் பண்பாட்டு மாற்றங்களுக்கு ஏற்பவும் பல்வேறு மாறுதல்களுக்குள்ளாகிப் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று இன்றுவரை உலகின் தமிழ்கூறும் பண்பாடுகளில் பயிலப்பட்டும், நுகரப்பட்டும் வருகின்றது.


பறை இசையின் வளர்ச்சியும் எதிர்கொள்ளும் சவால்களும்


இதில் துயரம் என்னவென்றால் இந்த நீண்ட பயணத்தில் பறையிசையினைக் கட்டிக் காத்து வரும் மானுடர்கள் கோரமான சாதி ஏற்றத்தாழ்வின் சவால்களையெல்லாம் எதிர்கொண்டே வருகின்றமையாகும்.

இன்றைய சமூகப்பண்பாட்டுப் பின்புலத்தில் பறையிசை சார்ந்த முன்னெடுப்புக்கள் பறையிசையில் வித்துவம் கொண்ட சமூகத்தவரிடமிருந்தும், பறையிசையில் அக்கறை கொண்டு செயற்படும் நபர்களிடமிருந்தும் மேற்கிளம்புவதனை அவதானிக்க முடிகின்றது.  புதிய இளந்தலைமுறையினரின் பங்குபற்றுகையில் இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தவகையில் இலங்கையின் கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பில் பறையிசைப் பயில்வுகளின் தளமாக பத்ததிச் சடங்குப் பண்பாடு விளங்கி வருகின்றது. அதாவது சடங்குக் காலங்களில் புதிய இளந்தலைமுறையினர் பறையிசையால் கவரப்பட்டு பறையிசையினைப் பயிலுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனால் பறையிசையில் தேர்ச்சியும், வித்துவமும் பெற்ற கலைஞர்களுடன் இணைந்து அதில் ஆர்வமான நபர்களும் இயங்குவதற்கான சாத்தியங்கள் வாய்க்கப்பெறுகின்றன.

இத்தகைய பறையிசைப் பயில்வு பறையிசையும் அதனைப் பயிலும் மனிதர்களும் எதிர்கொள்ளும் அகப் புறச் சவால்களையெல்லாம் எதிர்கொண்டு பறையிசையினை முன்னெடுக்கும் சமகாலச் செயல்வாதத்திற்கு வலுச்சேர்க்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கையாகக் கொள்ளப்படுகின்றது.

இந்தவகையில் மட்டக்களப்பில் உள்ளுர்ப் பத்ததிச் சடங்குப் பண்பாட்டினூடாகப் பறையிசையில் ஆர்வம் மேலிட்டு பறையிசைக் கலைஞர்களுடன் சேர்ந்து தொடர்ந்து கற்றும் ஆற்றுகைகள் செய்தும் வரும் இளந்தலைமுறையினரின் ஒருங்கிணைவாகவே 'முரசம் பேரிசைக் கலைகள், கற்கைகள் மன்றம்' உருவாகி இயங்கி வருகின்றது. (பறையினை முரசம் என்று சொல்வதனை மறைந்த மூத்த பறையிசைக் கலைஞனான கா.பரசுராமன் அவர்கள் வலியுறுத்தியிருந்தார்)


பறையும் சொர்ணாளியும் இணைந்தாலே  முழமை பெறும்



பறையிசை, பறைமேளக் கூத்து என்பதில் பறை எனும் தோல் வாத்தியத்துடன், சொர்ணாளி எனப்படும் துளை வாத்தியத்தின் பங்களிப்புச் சமாந்தரமானதாகவே விளங்கி வருகின்றது. பத்ததிச் சடங்கில் பறையும் சொர்ணாளியும் சேர்ந்து இசைக்கப்படும் போதே அதன் முழுப்பரிமாணத்தையும் அனுபவிக்க முடியும். சொர்ணாளி இசையில்லாத பறையிசை பாதிப்பறையிசையாகவே கொள்ளப்படுகின்றது. பறையிசையில் மகாவித்துவமுள்ள மூப்பன் மிகப்பெரும்பாலும் சொர்ணாளி வாசிக்கும் கலைஞனாகவே இயங்குவதைக் காண்கின்றோம். இரு வாத்தியத்தையும் சமதையாக வாசித்து ஆற்றுகை செய்யவல்ல திறனும், தேர்ச்சியுமுள்ள கலைஞனுக்கே மூப்பன் எனும் அங்கீகாரம் வழங்கப்படுவதை அறிய முடிகின்றது.

சொர்ணாளியுடன் ஒப்பிடும் போது பறையினைப் பயில்வது; இலகுவாக அமைவதால் பறையிசையில் ஆர்வமான புதிய தலைமுறையினரில் மிகப்பெரும்பாலானோர் பறையினை இசைப்பதிலேயே நாட்டஞ் செலுத்துகின்றனர். சொர்ணாளி வாசிப்பு மூச்சுப்பயிற்சியுடன் கூடிய திறனையும் தேர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது இதற்கென பிரத்தியேகப் பயிற்சிகள் தேவையாகவுள்ளன இதனால் மிகச்சில இளையோரே சொர்ணாளி இசைக்க முயலுகின்றார்கள். மட்டக்களப்பில் சொர்ணாளி இசைப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாக மிகப்பெரும்பாலும் மூத்த தலைமுறையினரே காணப்படுகின்றார்கள். இதனால் மூத்த தலைமுறையினரிடமிருந்து புதிய தலைமுறையினர் சொர்ணாளி இசைக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகியுள்ளது இந்நிலையில் சொர்ணாளி வாசிக்கும் ஆர்வமும் திறனுமுள்ள இளையோரை ஊக்கப்படுத்திப் பறையிசையின் முழுமையினை வலுப்படுத்த வேண்டிய தேவை அவசியமாகவும் அவசரமாகவும் உணரப்படுகின்றது.



இந்நோக்குடன் மூன்றாவதுகண் நண்பர்களின் ஒழுங்கமைப்பில் முரசம் பேரிசைக் கலைகள் கற்கைகள் மன்றம் வழங்கும் 'சொர்ணாளி இசை விழா - 2023' எதிர்வரும் 01.10.2023 ஆந் திகதி மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் பிற்பகல் 02:30 - 04:30 வரைக்கும் நடைபெறவுள்ளது.

தமிழர்தம் தொல் கலையின் இருப்பிற்கும் தொடர்ச்சிக்குமான இந்த முன்னெடுப்பிற்கு ஆர்வலர்களை ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்.

- து.கௌரீஸ்வரன் 



Post a Comment

0 Comments