இலங்கைக் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடமும், வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையமும் இணைந்து நடத்தும் Diploma in Arts, Higher Diploma in Arts என்ற இரு கற்கை நெறிகளையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் வைபவம் இன்று 11.10.2026 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09:00 மணி தொடக்கம் 10:30 மணி வரைக்கும் மட்டுநகர் புதிய வீதியிலுள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இந்நிலையத்தின் பதில் பணிப்பாளர் பேராசிரியை ஜெயபிரபா சுரேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பிரதம அதிதியாக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கணேஷ் சுரேஷ் அவர்கள் வருகைதந்து சிறப்பித்திருந்தார்.
இத்தோடு கலை கலாசார பீடத்தின் வெளிவாரிக் கற்கைகளுக்கான இணைப்பாளர் பேராசிரியர் எம்.வி.பௌசுல், கலை கலாசார பீடத்தின் வெளிவாரிக் கற்கைகளுக்கான பாடத்திட்டக் குழுவின் தலைவர் முதுநிலை விரிவுரையாளர் திரு அ.கன்னராஜ், இரண்டு கற்கை நெறிகளினதும் இணைப்பாளர்களான முதுநிலை விரிவுரையாளர் திருமதி கௌரி லட்சுமிகாந்தன், விரிவுரையாளர் பி.சுமன் ஆகியோரும், கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த பேராசிரியர் சி.சந்திரசேகரம், முதுநிலை விரிவுரையாளர்களான ஆர்.கிருபைராஜா, எம்.ரி.எம்.றிஸ்வி, எஸ்.எல்.எம்.நஸ்மல், எம்.எம்.குசைன், து.கௌரீஸ்வரன் ஆகியோரும், சிரேஸ்ட உதவிப் பதிவாளர் திரு ஏ.பிரகாஷ; அவர்களும், கல்விசாரா அலுவலர்களும், குறித்த இரண்டு கற்கை நெறிகளிலும் பதிவுசெய்துள்ள மாணவர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்ச்சியில், வரவேற்புரை, தலைமையுரை, பிரதம அதிதி உரை, கற்கை நெறிகள் பற்றிய விளக்கவுரை, நன்றியுரை என்பன செவ்வனே நடந்தேறின.
தற்போதைக்கு இரண்டு வருட டிப்ளோமாக் கற்கை நெறியாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்நிகழ்ச்சித் திட்டம் எதிர்காலத்தில் கலைத்துறையில் பொதுப் பட்டதாரிக் கற்கை நெறியாக விரிவுபடுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிழக்கு மாகாணத்திலும் ஏனைய இடங்களிலும் வாழும் பல்கலைக்கழகத்திற்கான உள்வாரி வாய்ப்புகளைப் பெறாத மாணவர்களுக்கான உயர்கல்வியை வெளிவாரியாக வார இறுதி நாள்களில் வழங்கி உள்வாரி மாணவர்களுக்குச் சமதையான தகுதிகளுடன் வெளிவாரிப் பட்டதாரிகளை உருவாக்கும் நோக்குடன் இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இக்கற்கைநெறி ஏறத்தாழ ஒரு வருடத்தில் நிறைவுபெற்று இரண்டாம் ஆண்டிற்குள் நுழைவதாகவும், இந்த வாய்ப்பை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்தித் தமது கல்வி மற்றும் தொழிற் தகைமைகளை விருத்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் இங்கு உரையாற்றிய அதிதிகள் வலியுறுத்தினர்.


0 Comments
tamil makal kural