ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை வரவேற்கின்றோம். - முன்னாள் பா.உ , ஜி.ஸ்ரீநேசன்.


தற்போதைய இலங்கை அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நாம் வரவேற்கின்றோம்.இந்த நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு ஊழல்கள் மோசடிகள்  கையூட்டுகள்,வீண் விரயங்கள் என்பனவும் முக்கியமான காரணங்கள் என்பதை நாம் மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளும் அறிந்துள்ளன.     என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதற்கான நிபந்தனைகளில் இப்படியான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அதனை முறையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளது. மேலும்,தேசிய இனப்பிரச்சினையை  எதனைக்கொடுத்தாவது தீர்க்க வேண்டும் என்பதும்,படையினரின் எண்ணிக்கையினை ஒரு இலட்சம் வரை குறைக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாகவுள்ளதாக கூறப்படுகின்றது.


அந்த வகையில் ஊழல் எதிர்ப்புச் சட்டமானது பாராளுமன்றத்தில் எதிர்ப்புகள் இன்றி வாக்கெடுப்புகள் இன்றி  நிறைவேற்றப்பட்டதை வரவேற்க வேண்டிய தேவையுள்ளது.         


மொட்டுக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் சீனி, வெள்ளைப்பூடு, எண்ணெய்,மருந்துகள், கொரோனாத் தடுப்பூசிகள்,கட்டுமான வேலைகள்,காணி கையகப்படுத்தல்,மண் வியாபாரம்,தொழில் வாய்ப்புகள் என்று அனைத்திலும் ஊழல், மோசடிகள்,கையூட்டுகள் இடம் பெற்றதாக அறியப்படுகின்றது.


அதை விடவும் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் தமக்குச் சாதகமாக்குவதற்காக  அளிக்கும் சலுகைகள், கொடுமானங்கள், தேர்தலின் போதான மோசடிகள் என்று பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன 


அந்த வகையில் இந்தச் சட்டமானது ஊழல் மோசடிகளில் ஊறிப்போன அரசியல் வாதிகள்,அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு முகவர்கள் போன்றவர்களுக்கு இந்தச் சட்டம் சிம்ம சொற்பனமாக அமையலாம். இருந்தாலும் இந்தச் சட்டத்தையும் கடந்து ஊழல்களைச் செய்ய வல்ல சிறப்புத் தேர்ச்சியாளர்களும் நம்நாட்டில் உள்ளனர். 

ஊழல் எதிர்ப்புச் சட்டம் நல்ல விடயமாக இருந்தாலும் அதன் அமுல்படுத்தல் என்பதே மிக முக்கிமானதாகும். 


சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும்,திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும். இப்படியும் பாடலடிகள் உண்டு.


பணம்,மதுபானம் கொடுத்தே தான்  தேர்தலில் வென்றேன் என்று போதையில் மார்தட்டிய அரசியல்வாதியொருவர் மட்டக்களப்பில் உள்ளார். இப்படியானவர்கள் இனி என்ன திட்டம் போடுவார்களோ தெரியவில்லை. 


சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகள் என்று இலங்கை அரசியல் திட்டம் கூறுகின்றது.ஆனால் தமிழ் அரச கருமமொழி என்பது அமுவாக்கலில்  இல்லை என்றே கூறலாம் அல்லது குறைந்தளவில் இருப்பதாகவே கூறலாம். அது போன்றுதான் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் அமுலாக்கலும் இருக்கவும் கூடும்.


ஊழல்வாதிகள் அதிகரித்து விட்டால், ஜனநாயகம் ஊழல் பக்கமாக சாய்த்தும் விடலாம்.மேலும் ஊழல்வாதிகள் அதிகாரத்தில் இருந்தால்,அவர்கள் தமது அதிகாரக் கவசத்தால் ஊழலை மறைத்தும் விடலாம்.பல மோசமான கொலைக்குற்றவாளிகள் கூட அதிகாரக் கவசத்தால் பாதுகாக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும் சர்வ சாதாரண நிகழ்வுகளாக உள்ளன. ஊழல்வாதிகள் சர்வதேசத்தை ஏமாற்ற என்ன செய்வார்களோ தெரியவில்லை.அதற்காக வித்தைகளையும் அவர்கள் கற்றுக் கொள்ளலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.



Post a Comment

0 Comments