பூகோள அரசியற் சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக நடைமுறையில் “13 அல்லது 13 பிளஸ்” என்ற வரையறைக்குள்ளேயே, அதாவது ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்டே, தமது நடைமுறை அரசியலைச் செய்து வருகின்றனர். இது தவறானது எனத் தமிழ் சிவில் சமூக அமையம் கடந்த 15 வருடங்களில் பல முறை சுட்டிக் காட்டியுள்ளது.
ஆனாலும் இன்று எமது தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், 13ம் திருத்தம் தொடர்பில் வெளிப்படையான நிராகரித்தல் அற்ற ஒரு மௌனத்தொனியே வெளிப்பட்டுள்ளது.தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றமையானது 13ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட தமிழ் மக்கள் கருத முடியாது என்று கூறுவதாகவே அர்த்தம் கொள்ளப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம்.
தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாடுகளாகவும், விஞ்ஞாபனம் தொடர்பான விரிவான வாசிப்பாகவும், பகிர்ந்து கொண்டவற்றில், இத் தேர்தல் விஞ்ஞாபனம், சில விடயங்களை வெளிப்படையாகவும், சில விடயங்களைப் பூடகமாகவும் வெளிப்படுத்துகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம்.
தமிழ் சிவில் சமூக அமையம் இந்நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலையும் கரிசனையும் கொள்கின்ற அதே வேளை தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற தமிழ்த் தேசிய அரசியல் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நாம் வலுவாக நம்புகின்றோம், விரும்புகின்றோம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நாம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோருகின்றோம்.
இத்தகைய அணுகுமுறையில் இருந்து – வாசிப்பிலிருந்து எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை நாம் வேண்டுகிறோம். தமிழ் அரசியல் நேர்மைப் பாதையில் தடம் பதிக்க நாம் உளச்சுத்தியுடன் தொடர்ந்து பயணிப்போம். தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு அத்தகைய பாதையில் செல்வதை உறுதி செய்ய எம்மாலான அனைத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.
2009இன் பின்னர் நடைபெற்ற மூன்று சனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்கள், தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்தனர். எமது வாக்கைப் பெற்றவர்கள் தேர்தலில் வென்று பதவிக்கதிரை ஏறினாலும் அல்லது தோற்றாலும் ஒரு போதும் சிங்கள் பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து அவர்கள் வெளியேறவில்லை என்பதே எமது அனுபவமாகும். இந்நிலையில் இம்முறை இனவாதிகளான சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை விட தமிழ் மக்களின் அபிலாசைகளை தனது தேர்தல் கோரிக்கைகளாக முன்வைத்துள்ள, தமிழ்ப் பொதுக்கட்டமைப்பால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்கி எமது இலட்சிய உறுதியை வெளிப்படுத்துவோம் என தமிழ் மக்களைக் கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
tamil makal kural