இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி கடந்த 48 மணித்தியாலங்களில் 10 பேர் பலியாகியுள்ளதுடன் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். அக்குரஸ்ஸ பகுதியில் 2 மாணவர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். 17 வயதான மாணவர் ஒருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, காலி தவலம பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் காணாமல் போயுள்ளனர். இரத்தினபுரி எலபாத்த பகுதியில் வெள்ள நீரில் அள்ளுண்டுச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக அவிசாவளை – புவக்பிட்டிய – ஹெலிஸ்டன் தோட்டப் பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த வீடு வெள்ளத்தில் மூழ்கியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இதன்படி, 78 வயதான முதியவர் ஒருவரும் 36 வயதான அவரது மகளும் 7 வயதான சிறுமி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேநேரம் புவக்பிட்டிய – ஹேவாஹின்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி 11 வயதான சிறுமி ஒருவரும் உயிரிழந்தார். மாத்தறை – தெய்யந்தர பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்
0 Comments
tamil makal kural